பொலிஸாரின் தாக்குதலில் விரையை இழந்த இளைஞன்!

0
129

மதவாச்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே தனது மகனின் விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அநுராதபுரம், மதவாச்சி துலாவெளி கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் கடந்த 7ஆம் திகதி தனது நண்பருடன் லொறியில் மதவாச்சி நகருக்குச் சென்றுள்ளார்.

இதன்போது லொறியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் லொறியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக தனது மகனின் விரைகளில் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பொலிஸாரிடம் வினவிய போது, இரண்டு இளைஞர்கள் பயணித்த லொறியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், பின்னர் வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் இடது விரை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.