ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; சிக்கித் தவிக்கும் மைத்திரி?: சரியான விளக்கமளிக்க கோரும் கட்சிகள்

0
193

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியும் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து அவரிடம் பல மணிநேர விசாரணைகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து இது தொடர்பாக அனைத்து உண்மை அடங்கிய விடயங்களை பாராளுமன்றின் அடுத்த விவாதத்தில் சமர்ப்பிக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டுள்ளதாக சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த செய்தியில்,

நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், சித்திரை புத்தாண்டுக்கு பிறகு எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஆகவே, 2019ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது ஜனாதிபதியாக பதவிவகித்திருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான விளக்க உரையை மக்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கோரியிருந்தது.

சமீபத்தில், ‘இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தனக்கு தெரியும்’ என சிறிசேன கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் பல மணிநேர விசாரணை நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் அவர் அதை ஏற்க மறுத்திருந்தார்.

அவர் குற்றப்புலனாய்வு பிரிவிடம் வெளிப்படுத்திய தகவலின் படி அண்டை நாட்டின் பெயரை குறிப்பிட்டதாக பல ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

இது தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் நடைபெறும் போது ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மேலும் பல புதிய சர்ச்சைகளுக்கு வலிவுகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.