உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தாம் ஜனாதிபதியானால் தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியாக தாம் பதவியேற்ற பின் இரு மாத காலப்பகுதிக்குள் 1948 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை கொடுப்பேன்
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்குள் ஸ்கொட்லண்ட் யார்ட் (Scotland yard) மற்றும் அமெரிக்க உளவு நிறுவனம் (FBI ) போன்றவற்றுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நாடாளுமன்றத்தில் நேற்று(01) தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் பலரது அரசியல் தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது என பல விமர்சனங்களும் கருத்துக்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், இதன் பிரதான சூத்திரதாரி அரசியல் நோக்கத்துக்காகவே பாதுகாக்கப்பட்டு வருகிறார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தால் 45 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 269 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். பலர் இன்றும் படுக்கையில் விசேட தேவையுடையவர்களாக காணப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும், குறித்த சம்பவத்தால் பாதிகப்பட்டவர்கள் நாட்டு மக்களே. அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் பாரிய பொறுப்பாக அமைந்துள்ளது.