Ilaiyaraaja Biopic: படத்தில் இணையும் கமல்ஹாசன் – ஆச்சர்யக் கூட்டணி; வெளியான தகவல்!

0
149

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ் என்பதும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்பதையும் நேற்று அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. படத்திற்கு ‘இளையராஜா’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் தொடக்க வி்ழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், வெற்றிமாறன், இளையராஜா என திரையுலகத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா இல்லை வேறு ஒருவரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீங்கீதம் சீனிவாசராவின் படைப்புகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், சென்னையில் `அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரிலான விழாவை சென்னையில் கமல்ஹாசன் ஒருங்கிணைத்திருக்கிறார்.

நேற்று அந்த விழாவின் நான்காம் நாள் நிகழ்வு நடைபெற்றது. அதையொட்டி `மும்பை எக்ஸ்பிரஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டது. நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கலந்துகொண்டிருந்தார். மேலும் திரைத்துறை சார்ந்த பிரபலங்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவே சொல்கிறேன் எனக்கூறிவிட்டு `இளையராஜாவின் பயோபிக் படத்திற்கான திரைக்கதையை நான் எழுதுகிறேன்’ என கமல்ஹாசன் கூறினார். அதைக் கேட்டதும் அரங்கிலிருந்த அனைவரும் பலத்த கரவொலியை எழுப்பினர். படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிற நிலையில் இந்தத் தகவல் மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.