“கலை” என்பது ஆழமான கருத்துக்களை உலகுக்கு எடுத்துரைக்கும் வல்லமை படைத்த ஒரு ஊடகமாகும். விடை அறியாமல் தேங்கி நிற்கும் பல கேள்விகளுக்கு “கலை” எனும் வடிவம் மூலம் பதில் தேடலாம். இவ்வாறு விடை அறிந்த சந்தர்ப்பங்கள் உலக வரலாற்றில் பல உள்ளன. உதாரணங்கள் பல உள்ளன.
உலகளாவிய ரீதியில் அவ்வாறான கலைப் படைப்புகள் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டாலும் இலங்கைத் தீவைப் பொறுத்த வரையில் அது சற்று புதிய விடயமே.
எனினும், அந்தக் கருத்தை பொய்யாக்கும் வகையில் தற்போது இலங்கையிலும் உண்மைகளை வெளிக்கொணரும் பல கலைப் படைப்புகள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளன.
மறைமுகமான குறியீடுகளுடனான கலைப் படைப்புகளையும் பொது மக்கள் மிக இலகுவாக புரிந்துக்கொள்ளும் நிலையை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் உலகளாவிய ரீதியில் “மகளிர் தினம்” கொண்டாடப்பட்டது.
சர்வதேச மகளிர் தினத்தில் மேற்கூறப்பட்டது போன்ற “கலை” தொடர்புபட்ட ஆக்கங்கள் , குரல் கொடுப்புகள் பற்றி அநேகமாக கேள்விபடக் கூடியதாக இருக்கும்.
நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இதற்கான ஓர் சிறந்த உதாரணத்தை காணக்கூடியதாக இருந்தது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அத்தனை பெண்களுக்காகவும் அமைதியாக காத்திருக்கும் ஒரு உருவச்சிலை.
இதனை ‘Masterpiece of Abuse’ என குறிப்பிட்டுள்ளனர். ஒருவருடைய முதல் பார்வையிலேயே இது செய்தித்தாள்களால் செய்யப்பட்டிருக்க கூடியதான ஒரு கலைப் படைப்பு.

ஆனால், சற்று கூர்ந்து அவதானித்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் பல சித்திரவதைகளை உள்ளடக்கியதாக இந்த கலைப்படைப்பு அமைந்துள்ளது.
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை ஒழிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி புறக்கோட்டையில் நேற்று இடம்பெற்றது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் நோக்கில் ”Ogilvy Sri Lanka மற்றும் Women In Need” அமைப்புகள் இணைந்து ஆயிரம் பேர் வந்து செல்லும் கொழும்பு புறக்கோட்டையில் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
வன்முறைக்கு ஆளாகி அதிலிருந்து உயிர் பிழைத்த பெண்களைப் பற்றி சமுதாயத்திற்கு உணர்த்துவதே இதன் நோக்கம். பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை மற்றும் துஷ்பிரயோக சம்பவங்களை விவரிக்கும் செய்தித்தாள்களின் பக்கங்களுடன் அது முழுமையாக மூடப்பட்டிருந்தது.
இவை வெறும் எழுத்துக்கள் அல்ல என்பதை ஆழமாகப் புரிந்து கொள்ளக்கூடிய வெற்றிகரமான கலை முயற்சியாக இது கருதப்பட்டது.
மகளிர் தினத்தில் மட்டுமே பேசப்படும் வாழ்த்துகளை விட ஆண்டு முழுவதும் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் யதார்த்தத்தை சமூகத்திற்குக் எடுத்துக்காட்டுவதே நம்பிக்கை என்று இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இந்நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெண்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் கடினமான சவால்கள் குறித்து மக்களின் கவனத்தை ஈர்ப்பது முன்னுரிமையாக இருந்தது. இந்த கலைப்படைப்பு பெண்களின் பல தீவிரமான சிக்கல்களை சித்தரிக்கிறது.