சாந்தனின் உயிர் பறிக்கப்பட்டமைக்கு இந்திய, இலங்கை அரசாங்கங்களே பொறுப்பு: தமிழர்களுக்கு டில்லி பாகுபாடு காட்டுவதாக தமிழரசுக் கட்சி குற்றச்சாட்டு

0
161

”இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் அக்கறையின்மை காரணமாக சுதேந்திரராஜா எனப்படும் சாந்தன் என்ற நல்ல மனிதரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.” இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் கடந்த 28ஆம் திகதி சென்னை மருத்துவமனையில் காலமானார். இவரது பூதவுடல் நேற்று திங்கட்கிழமை எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சாந்தனுக்கு இன்று நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,

”ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபகராக கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் பின்னர் 2022ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட ஏழு பேரில் 3 பேர் இந்திய குடியுரிமை கொண்டவர்கள். இந்திய குடியுரிமை கொண்டவர்களாக இருந்தமையால் அவர்கள் இயல்பு வாழக்கையை வாழத் தொடங்கினர்.

கண்டுகொள்ளாத இலங்கை அரசாங்கம்

ஆனால், இலங்கை குடியுரிமையை கொண்ட சாந்தன் உட்பட 4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கை பிரஜைகள் என்பதை வெளிப்படுத்தப்பட வேண்டுமென இவர்களது குடும்பத்தினர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன், வெளியுறவு அமைச்சருக்கு மூன்றுமுறை கடிதங்களையும் எழுதியுள்ளனர்.

ஆனால், அரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக இவரை இலங்கைக்கு அழைத்துவரும் இராஜதந்திர நகர்வுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதனால் சாந்தன் உயிருடன் தாயகம் திரும்ப முடியாது போனது.

தமிழ் மக்கள் சார்பாக சாந்தனுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இலங்கை, இந்திய அரசாங்கங்கள் நினைத்திருந்தால் சாந்தன் இலங்கை திரும்பி தமது தாய் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்திருக்க முடியும்.

இந்திய வெளிவிவகார அமைச்சும் தமிழர்கள் தொடர்பிலான பிரச்சினைகளில் எவ்வித தீர்மானங்களையும் எடுப்பதில்லை. இலங்கை, இந்தியா என்ற இரண்டு நாடுகளும் சாந்தனின் இறப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும். ஏனைய மூவரையும் விரைவாக இலங்கை அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.