சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

0
154

அம்பாறை, மாளிகைக்காடு – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.

தேடுதல் நடவடிக்கை
மாளிகைக்காடு – சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 13 – 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் நேற்று(16) ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது கடலில் இறங்கி படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை
இதன்படி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் சம்பவத்தைக் கேள்வியுற்ற நிமிடம் முதல் கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து தேடுதலை முன்னடுத்துவருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.