எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க போவதாகவும் அவரை ஆதரிக்க வேண்டியது பொதுஜன பெரமுன உட்பட நாட்டை நேசிக்கும் அனைவரதும் கடமை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நேற்று கலந்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரசன்ன இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றுமாரு சந்தர்ப்பா்தை வழங்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
வேலை செய்த, மக்கள் நம்பிக்கை வைத்துள்ள சவாலை ஏற்றுக்கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடிந்த தலைவரிடம் நாட்டை ஒப்படைப்பது சிறந்தது என்பது எனது நிலைப்பாடு.

ரணில் விக்ரமசிங்கவை திட்டி விமர்சிக்காதவர்கள் இல்லை. என்னை போல் அவரை விமர்சித்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கட்சி என்ற முறையில் நாட்டுக்காக ஒரு அடியை பின்நோக்கி வைக்கிறோம். சவாலை ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே இருக்கின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போது நாட்டை பற்றி சிந்தித்தே முடிவுகளை எடுத்தது. இதனால், எமது கட்சி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறேன்.
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித தயார்நிலையிலும் அரசாங்கம் இல்லை. தேர்தலுக்கு தேவையான நிதியும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு 10 லட்சம் வாக்குகளே கிடைக்கும்

மக்கள் ஆதரவில் மக்கள் விடுதலை முன்னணி முதலிடத்தில் இருப்பதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த கட்சி 5 லட்சம் வாக்குகளையே பெற்றது. அவர்களுக்கான ஆதரவு நூறு வீதம் அதிகரித்திருந்தாலும் 10 லட்சம் வாக்குகளையே பெறுவார்கள். ஆயிரம் வீதம் அதிகரித்தாலும் 50 லட்சம் வாக்குகளையே பெறுவார்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாலும் 56 லட்சம் வாக்குகளை பெற்றார். இதனால், நாட்டில் உள்ள எந்த கட்சியும் தனக்கான ஆதரவை 10 வீதத்தினால் அதிகரித்துக்கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு பின்னர், நாட்டின் சகல ஜனாதிபதிகளும் கூட்டணியின் மூலமே தெரிவு செய்யப்பட்டனர். கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
அத்துடன் தேசிய பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டே ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். போரை வென்று அமைதியை ஏற்படுத்தவே மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவர் அதனை செய்தார். நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இரண்டாவது முறையாக அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்தனர். நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதா இல்லையா என்பது வேறு விடயம்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்தோம். தற்போது இருப்பது பொருளாதார நெருக்கடி, ரணில் விக்ரமசிங்க மாத்திரமே அந்த சவாலை ஏற்றுக்கொண்டார். அவர் மாத்திரமே சவாலை ஏற்கும் தலைவராக இருக்கின்றார் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.