சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிகிறது.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் கட்சிகள்
இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோரும் கையெழுத்திடவுள்ளனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ள ஏனைய சில தரப்புகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறுது.
டலஸ், ஜீ.எல்., டிலான் தரப்பு குறித்து கேள்விக்குறி
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா உள்ளிட்டோரங்கிய தரப்பு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்களா என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
சஜித்துக்கு ஐ.தே.க. அழைப்பு
இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்துடன் இணைந்து பணியாற்ற முன்வருமான ஐக்கிய தேசியக் கட்சிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெய்ய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இந்த அழைப்பினை விடுத்தார்.
அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான இராஜதந்திரி கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்கவுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் ஒன்றில் சஜித் பிரேமதாசவை மீளவும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையிலேயே சஜித்துக்கு இந்த அழைப்பு வந்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டது.
அதில், ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையத்துடன் அரசு இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க திட்டமிடுவதாகவும் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.