இலங்கையில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி முதன் முறையாக சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். நாட்டிற்கு உமா ஓயா திட்டம் மிகவும் தேவையானது, இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலை மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ச அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையங்களில் ஒன்றாக உமா ஓயா திட்டத்தின் 120 மெகாவாட் நீர்மின் நிலையம் இந்த மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மஹிந்த தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட சாதகமான பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இது அமைந்துள்ளது. உமா ஓயா திட்டத்தை செயல்படுத்துவது இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் கைவிடப்பட்ட பின்னர் மக்கள் விடுதலை முன்னணி உமா ஓயா திட்டத்தை மிகவும் வெளிப்படையாக விமர்சித்திருந்தாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்றத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எனினும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவரே உமா ஓயா திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்ததாக மகிந்த ராஜபக்ச அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.