இலங்கை ஜூடோ கூட்டமைப்பு (SLJF) நடத்தும் 60ஆவது தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் 450க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து தேசிய அளவிலான போட்டியாளர்களும் இதில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சிறந்த ஜூடோக்கள் 2024’ தேசிய விருதுகளுக்கான தேர்வும் இந்த போட்டிகளில் இடம்பெறும். மொத்தம் 54 போட்டியாளர்கள் ஏற்கனவே 2023 தேசியக் குழுவில் உள்ளனர்.
அதே நேரத்தில் 2022ஆம் ஆண்டு பேர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பதாவது இடத்தைப் பெற்ற ராஜித புஷ்பகுமார, 2024 ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகும் பயிற்சிக்காக இத்தாலிக்குச் சென்றுள்ளார்.
புஷ்பகுமார பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் முயற்சியில் இரண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.100,000 அவரது பயிற்சிக்காக வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.