ஹமாஸை துடைத்தொழிக்கும் இலக்கை நெருங்குகிறோம் – இஸ்ரேல்

0
195

ஹமாஸைத் துடைத்தொழிக்கும் தனது இலக்கை நெருங்கிக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கில் உள்ள கான் யுனிஸ் (Khan Younis) நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காஸாவில் ராஃபாவுக்கு செல்லும் பாதையிலும் போர் தீவிரமைடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது ஹமாஸ் நிலைகுலைந்து சிதறுவதால் தாக்கும் மேலும் கடுமையாக்க வேண்டும் இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

குறிப்பாக காஸாவின் முக்கிய தென் நகரமான கான் யூனிசில் அப்படைகள் சண்டையில் ஈடுபட்டு உள்ளதாக பாலஸ்தீனர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்நகரைவிட்டு வெளியேறுமாறு அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் கான் யூனிசை இஸ்ரேலியப் படைகள் சுற்றி வளைத்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திவிட்டது. மேலும் நவம்பர் இறுதியில் ஏழு நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட போர் நிறுத்தம் டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடைந்தது.

இவ்வாறு ஹமாஸுடனான போர்நிறுத்த முயற்சிகள் நிறைவேறாத நிலையில் காஸாவின் தென் பாதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது.

கடுமையான சண்டை நடப்பதாக கான் யூனிஸ் நகரக் மக்கள் தெரிவித்தனர். காஸாவில் தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை முன்னேற்றம் கண்டு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 7,000 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேலியப் படைகள் கொன்றுவிட்டதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸாச்சி ஹனேக்பி தெரிவித்துள்ளார். ஆனால் இந்த எண்ணிக்கை எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

அதேநேரம் “நாம் தாக்குதலை இன்னும் கடுமையாக்க வேண்டும்” என்று இஸ்ரேல் ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஸி ஹலேவி தமது படை வீரர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே காஸா வட்டாரத்தில் இதுவரை 17,700 பேர் உயிரிழந்துவிட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்று கூறினார்.

மேலும், பல்லாயிரம் பேரைக் காணவில்லை என்றும் அவர்களில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உயிரிழந்தோரில் ஏறக்குறைய 40 விழுக்காட்டினர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில் காஸாமீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கும் போரில் பாலஸ்தீனர்கள் இறப்பதற்கும் அமெரிக்காவும் பொறுப்பேற்கவேண்டும் என்று பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது ‌ஷ்ட்டாயெ கூறினார். கத்தார் தலைநகர் டோஹாவில் மாநாடு ஒன்றில் அவர் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.