ஜனவரி பிற்பகுதியில் மலேசியா செல்லும் ஜனாதிபதி

0
165

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் மலேசியாவுக்கு அரசுமுறை பயணமொன்றை மேற்கொள்ளக் கூடுமென அரசின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி பல்வேறு அரசுமுறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வலுவான பொருளாதார உறவுகளை பேணுவது சமகால அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

அதன் பிரகாரம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்னாம், சீனா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுடன் புதிய பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதியின் மலேசிய விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மலேசியாவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பும் அந்நாட்டு பிரதமரால் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசியான் நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்க்கும் இலங்கை

இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்குள் இலங்கை நுழைந்துள்ளது.

ETCA உடன்படிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.

தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் என்ற கருத்திட்டத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ISFTA ஒப்பந்தத்தைவிட ETCA உடன்படிக்கை பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், விநியோக திறனை விரிவுபடுத்தவும், சந்தை அணுகலை விரிவுபடுத்தவும் ETCA வாய்ப்பை வழங்குமென அரசாங்கம் கருதுகிறது.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ETCA உடன்படிக்கையை கைச்சாத்திடும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவுடன் திறந்த மற்றும் வெளிப்படையாக பொருளாதார உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் ஆர்வங்காட்டியே வந்துள்ளார்.

அதன் பிரகாரம் மீண்டும் ETCA உடன்படிக்கையை கைச்சாத்திடம் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன், கடந்த மாதம் மெய்நிகர் சந்திப்பொன்றையும் இருநாட்டு இராஜதந்திரிகளும் மேற்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

ஆசியா நாடுகளுடன் பொருளாதார உறவை பலப்படுத்த எதிர்ப்பார்ப்பு

ETCA உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் முன்னெடுத்துவரும் சூழலில் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பிராந்தியங்களுடனான தனது ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார, சமூக, கலாசார உறவுகளை இலங்கை வலுப்படுத்தி வருகிறது.

ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயத்தில் இருநாட்டு உறவுகளை பலப்படுத்தும் வகையில் முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

தெற்காசியவை பொருத்தமட்டில் தற்போது இலங்கையானது இந்தியா (இந்தியா இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – ISLFTA) மற்றும் பாக்கிஸ்தான் (பாகிஸ்தான் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – PSFTA) உட்பட முக்கிய தெற்காசிய பங்காளிகளுடன் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை கொண்டுள்ளது.

பங்களாதேஷுடன் PTA வர்த்தக உடன்படிக்கை

SAFTA, SAARC, SAPTA ஆகிய தெற்காசிய பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் தெற்காசிய சந்தைகளுக்கான அணுகலையும் இலங்கை கொண்டுள்ளது. பங்களாதேஷுடன் PTA வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜுன் மாதம் பங்களாதேஷுடன் தொடங்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்கனவே மூன்று சுற்றுகள் நிறைவுற்றுள்ளன.

பங்களாதேஷுடனான இலங்கையின் தற்போதைய ஒப்பந்தங்களுக்கு அப்பால், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக PTA உடன்படிக்கையை கைச்சாத்திடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஆசியான் நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கப்பூருடன் ஒரு விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (Sri Lanka Singapore Free Trade Agreement – SLSFTA) இலங்கை கைச்சாத்திட்டது. இது அதே ஆண்டு மே மாதம் நடைமுறைக்கு வந்தது.

சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை

பல்வேறு துறைகளில் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பிற ஆசியான் நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சீனாவுடன் இலங்கையும் கலந்துரையாடி வருகிறது.

சீனாவில் தெரிவு செய்யப்பட்ட இலங்கைப் பொருட்களுக்கான சந்தை அணுகலைப் பெற இதுவரை ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.

மேலும் உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான “பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவ (RCEP)” உடன்படிக்கையில் இணைவதன் மூலம் ஆசியான், ஓசியானியா மற்றும் கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார ஒருங்கிணைப்பு திட்டத்தை நிறுவுவதில் இலங்கை முன்னேறி வருகிறது.

அத்துடன் தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் உட்பட மேலும் பல நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் பேச்சு வார்த்தைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

2048 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடைந்த பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.