விமர்சனங்களை முன்வைக்கும் அடிமுட்டாள்களுக்கு பதில் வழங்க விரும்பாதபோதும் தாம் மக்களுக்கு பதில் வழங்க கடமைப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க (07.12.2023) சில கருத்துகளை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை கடுமையாக சாடிய இராஜாங்க அமைச்சர் அவர் போலியாகப் புலி சாயம் பூசிக்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பாராளுமன்றில் இருந்து வெளியேற முற்பட்ட உறுப்பினர் சாணக்கியனை வெளியேற வேண்டாமெனவும் ஒரு ஆணாக இருந்தால் சபையில் அமர்ந்து தமது கேள்விகளுக்கு பதில் வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (08) கருத்துரைக்கையிலே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த சாணக்கியன்;
”பிறிதொரு வேலை நிமித்தம் நான் சபையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் ஆம்பிளையாக இருந்தால் சபையில் இருந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள் என ஒருவர் கூறினார்.
இந்த சபையில் கேள்விகள் கேட்கப்படும் போது ஜனாதிபதியே தப்பி ஓடுவதனை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆகவே ஆம்பிளையா இல்லையா என என்னிடம் கேட்பதைவிட ஜனாதிபதியிடம் கேட்கவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைப்பாளராக பதவி வகித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். இதில் புதிதாக கண்டுபிடிக்க ஒன்றும் இல்லை.
என்னுடைய பாடசாலையைக்கூட தவறாக தெரிவித்திருந்தார். அது ஒரு சிங்கள பாடசாலை என குறிப்பிட்டிருந்தார். கண்டி திருத்துவக் கல்லூரி மூவின மக்களும் கல்வி பயிலும் ஒரு பாடசாலை.
சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறியிருந்தார். எனக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் இருக்கின்றார்கள். அத்துடன் என்னுடைய திருமணங்கள் குறித்து கூறியிருந்தார். இவர்கள் கூறுவதை பார்த்தல் தற்போது எனக்கு ஐந்து, ஆறு திருமணங்கள் நடந்திருக்கும்.
ஆகவே இவ்வாறான அடிமுட்டாள்களுக்கு பதில் வழங்க விரும்பாவிட்டாலும் மக்கள் பதில்களை எதிர்பார்ப்பதனால் இதனை தெரிவிக்கின்றேன். இவ்வாறான விமர்சனங்கள்தான் எனது வளர்ச்சிக்கு காரணம்” எனத் தெரிவித்தார்.