வடகிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் முழு ஆதரவு வழங்க தயார்

0
211

வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு காஷ்மீர் மக்கள் தொடர்ச்சியான ஆதரவினை வழங்குவார்கள் என்று காஷ்மீரின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர்.

அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினருக்கும் காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது.

இதன்போது வடக்கு கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காஷ்மீரின் முக்கிய பிரமுகர்களான சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் ஆகியோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தமிழர்களையும் அவர்களின் தாயகத்தையும் பாதுகாக்க இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு மற்றும் நீதிக்கான ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக வடக்கு, கிழக்கு அரசியல், சிவில், புலம்பெயர் தரப்பினர் எடுத்துரைத்ததுடன் தமிழர் தாயகத்தில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் இணைப்பு திட்டங்களை ஊக்குவித்தல், சுயநிர்ணய உரிமை மற்றும் சிவபூமியைப் பாதுகாத்தல், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவற்றுக்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு காஷ்மீரர்கள் தயாராகவுள்ளதாகவும் தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையடல்களை எதிர்பார்ப்பதாகவும் சுஷில் பண்டித், ரவீந்திர பண்டித் தெரிவித்தனர்.