9 ஆண்டுகளாக  திட்ட அளவில் மட்டுமே காணப்படும் தானியங்கி அபராதம் செலுத்தும் முறை

0
149

போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் அபராதம் வசூலிப்பதனை துரிதப்படுத்தும் வகையில் தானியங்கி அபராதம் செலுத்தும் முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்ட போதும் இதுவரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அரச நிறுவனங்களின் நிதிநிலை தொடர்பில் 2022 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அபராதம் அறவிடும் நடவடிக்கையை துரிதப்படுத்துவதோடு வருமானத்தில் சேர்க்கப்படும் அபராதத் தொகையை அதிகரித்து பொது மக்கள் எளிதாக அபராதம் செலுத்துவதும் இதன் நோக்கமாக காணப்பட்டது.

என்.கே. இளங்ககோன் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலம் அபராதம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை குறித்த திட்டம் செயற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தானியங்கி அபராதம் செலுத்தும் முறையை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை அனுமதியின் பின்னர் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.