இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வேண்டும்; வெள்ளை மாளிகை வலியுறுத்து

0
171

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த மாதம் 7ஆம் திகதியில் இருந்து போர் நடந்து வந்தது.

பின்னர் இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சில் நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்கத் தலையீடு கத்தார், எகிப்து மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க விரும்புகிறோம். எனவே போர் இடைநிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா ஆதரிக்கிறது.

நான் கூறியது போல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்த உள்ளோம். ஹமாஸுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கி வருவது இஸ்ரேலுக்குத் தெரியும் என கூறினார்.