மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

0
204

மத்திய வங்கியில் இருந்து காணாமல் போன 50 இலட்சம் ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற நிரோஷன் பெரேரா இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உரிய விசாரணைகளின் முடிவில் சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கத்தை பெற்று அதற்கு காரணமான தரப்பினரை வெளிப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன், விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விசாரணைகள் நிறைவடைந்தவுடன் பேரவைக்கு அறிவிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காக சென்ற அதிகாரிகள் சிலர் மீண்டும் சரிபார்த்து வருவதாக கூறி பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சம்பவம் தொடர்பில் வங்கியின் பாதுகாப்பு தரப்பு மற்றும் பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.