மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்காக பொலிஸார் இழிவாக செயற்படுவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

0
202

தமிழர்கள் மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்காக பொலிஸார் மிகவும் கேவலமாகவும் ,கீழ்த்தரமாகவும் செயற்படுவதுடன் நீதிமன்றத்தினை தவறாக வழிநடாத்தி தடையுத்தரவுகளை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

எந்தவொரு அச்சமும் இல்லாமல் நாளைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து துயிலும் இல்லங்களிலும் அணி அணியாகவந்து ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (26) மட்டக்களப்பு வாகரை கண்டலடியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு அங்கிருந்த நினைவுக்கல்லும் உடைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (26) வாகரை கண்டலடியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்க கூடாது என வாகரை பிரதேசத்தினை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு ஏற்பாட்டுக்குழுவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நாளிலே எங்களுடைய மக்கள் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு துருதிஷ்டவசமான நிலையிலே இருக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக வருவது போல் நாளை 27ஆம் திகதி வழக்கம் போல மாலை வேளையிலே மக்கள் அஞ்சலி செலுத்த இந்த இடத்திற்கு வருகை தருவார்கள், அதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்பதை நான் இவ்விடத்தில் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற பல விடயங்களை கடந்து வந்த ஒரு சமூகம் நாங்கள். 75 வருடங்களாக எங்களுடைய மக்களுக்கான உரிமை கோரும் மக்கள் நாங்கள். எங்களுக்கான அடிப்படை உரிமையை கோருகிறோம். அநீதியாக மற்றவர்களுடைய உரிமையை கோரவில்லை.

ஆனால் இந்த விடயத்தை சர்வதேச சமூகம் வரை கொண்டு செல்ல வேண்டும். இந்த விடயங்களை தொகுத்து எடுத்து ஐ.நா வரையில் கொண்டு செல்வோம். நாங்கள் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க விரும்புகிறோம்.

வாகரை பிரதேச இளைஞர்களை பாராட்டுகிறேன். பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் எங்களுடைய உரிமைக்காக இன்னும் போராடி வருகின்றனர். ” என தெரிவித்தார்.