வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

0
165

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதி அறிக்கையை தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல் தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று காலை கலந்துகொண்டிருந்தார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச துறை மற்றும் தனியார் துறையின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

20,000 ரூபா சம்பள உயர்வைக் கோரி அரச சேவையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே, அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்ளை மேற்கொள்வது தொடர்பிலான யோசனைகளை முன்வைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் அதாவுதஹெட்டி, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மதுஷங்க திஸாநாயக்க ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர்.