வட காஸாவின் சில பகுதிகளில் தினமும் நான்கு மணிநேர போர் நிறுத்ததிற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எனினும் போர் நிறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை தினமும் சிறிது நேரம் நிறுத்துவதன் மூலம் மனிதாபிமான உதவிக்கான இரண்டு பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற வாய்ப்பு கிடைக்கும் என்று வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கர்பி கூறினார்.
பிணை பிடித்து வைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் தற்காலிகப் போர் நிறுத்தம் உபயோகப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் போரை சிறிது நேரத்துக்கு நிறுத்துவதற்கான திட்டம் இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் இருந்தால் அது வெவ்வேறு பகுதிகளில் இடம்பெறும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் காஸா நகரை முழுமையாக முற்றுகையிட்டது. நகரின் தெற்குப் பகுதியில் உருவாக்கப்பட்ட முக்கியப் பாதையின்வழி தினமும் மூன்று, நான்கு மணிநேரத்துக்குப் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
காஸாவிலிருந்து தப்பியோடும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்காலிகப் போர் நிறுத்தம் இருக்காது என்று இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் யொவாவ் கலான்ட் செய்தியாளர்களிடம் கூறினார்.
தகவல் குறிப்பிடப்படாத பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் அரசியல் ஆலோசகர் டாஹர் அல்-நோனோ தெரிவித்தார். இஸ்ரேலுடன் இதுவரை எந்த ஒப்பந்தமும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.