‘குதிரை போன பிறகு லயத்தை மூடுவதில் அர்த்தம் இல்லை’; விளையாட்டுத்துறை அமைச்சர் சபையில் தெரிவிப்பு

0
184

அரச வங்கி ஒன்றின் கணக்கில் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

‘ஊழல் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்டோர் பதவி நீக்கம்’ எனும் தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

குறித்த விவாதத்தில் உரையாற்றுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார். இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதத்தில் இருப்பதன் காரணமாக வங்கி முகாமையாளர் ஆலோசனை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் அவர்களின் கடவுச்சீட்டை இடைநிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இந்த விடயத்தில் தாமதம் ஏற்படும் நிலையில் மேலும் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குதிரை போன பிறகு லயத்தை மூடுவதில் அர்த்தம் இல்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.