இலங்கை – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்: பத்தாயிரம் பணியாளர்களை பணியமர்த்த ஒப்பந்தம்

0
224

இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர் Moshe Arbel மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தத்தின் மூலம், 10,000 இலங்கைப் பண்ணைத் தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.

இஸ்ரேலிய நிறுவனங்களில் விவசாய துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டுக்கு வரவழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்புக்கு அமைய முதல் கட்டமாக இலங்கை விவசாய தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

வீசாக்களை புதுப்பிக்க நடவடிக்கை

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக வீசா காலாவதியானதன் பின்னரும் நாடு திரும்ப முடியாத நிலையில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க இஸ்ரேல் அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தது.

வீசா இல்லாத தாதியர்கள் மற்றும் ஏனைய துறைசார் இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இஸ்ரேல் தமது விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இஸ்ரேலில் நிர்கதிக்குள்ளான இலங்கையர்களுக்கு விவசாயத்துறையில் வேலை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்த பின்னணியில் 4,500 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வரும் நிலையில் பெரும்பாலானவர்கள் வீட்டு பராமரிப்பு துறையிலே பணிபுரிந்து வருகின்றனர்.

கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இஸ்ரேலிய விவசாயத்துறை

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாயத்துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மதம் 7 ஆம் திகதி முதல் இன்று வரை 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 20,000 பலஸ்தீனிய விவசாயிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது.

போர்ச் சூழல் காரணமாக இஸ்ரேலின் விவசாயத்துறையில் உணவு உற்பத்தி, சேமிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன.

மயானமாக காட்சியளிக்கும் காசா

கடந்த ஒக்டோபர் மதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் இன்றுவரை தொடர்கின்றது. இதன்படி காசா பகுதி தற்போது புதைக்குழியாக மாறியுள்ளது என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் António Guterres தெரிவித்துள்ளார்.

மோதல் காரணமாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்கள் காரணமாக காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 4100 பேர் சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.