இஸ்ரேல் வான் தாக்குதல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்டவர்களில் 40 சதவீதமானோர் குழந்தைகள் என காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் தங்களது குழந்தைகள் உயிரிழந்தால் வைத்தியசாலைகளில் அவர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக அவர்களது கால் பாதங்களில் பெயர்களை காஸா மக்கள் எழுதிவைக்கின்றனர்.
சி.என்.என்னில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் எடுத்த காணொளியில் இது தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஒரே இரவில் இஸ்ரேல் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட காஸாவின் மத்திய பகுதியிலுள்ள டெய்ர் அல் பலா (Deir Al Balah) மாவட்டத்தில் உள்ள அல் அக்ஸா (Al Aqsa) தியாகிகள் வைத்தியசாலையில் இருந்து குழந்தைகளின் கால் பாதங்களில் பெயர்களைக் கொண்ட காணொளிகள் வெளியாகியுள்ளது.
ஒரு குழந்தை மற்றும் கொல்லப்பட்ட மூன்று சிறுவர்களை அவர்கள் காட்டுகின்றனர். அந்த சிறார்கள் மற்றும் ஒரு குழந்தையின் கால் பதாங்களில் அரபு மொழியில் பெயர் எழுதப்பட்டதை காணொளியில் காணமுடிகிறது.
நான்கு பேரும் சவக்கிடங்கு என நம்பப்படும் தோன்றும் ஒரு அறையிலுள்ள தரையில் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ரெச்சர்களில் படுக்க வைப்பட்டுள்ளனர்.
அந்த அறையில் பல சடலங்கள் நிறைந்துள்ளன. அந்த குந்தைகளின் பெற்றோர்களும் இறந்தனரா என்பது தெரியவில்லை.
அண்மையக் காலமாக இந்த நடைமுறை வழக்கமாகிவிட்டதாக சி.என்.என் செய்தியாளர்கள் கூறினர்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 117 சிறுவர்கள் உட்பட 266 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சின் பேச்சாளரான வைத்தியர் அஷ்ரஃப் அல்-கித்ரா கூறினார்.
இதேவேளை, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த சுற்று வட்டத்தில் இருந்த ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காஸாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், 222 இஸ்ரேலியர்கள் தற்போது பணய கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளதாக, காஸாவில் நிலைகொண்டுள்ள வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், பணயக்கைதிகள் சிலரது புகைப்படங்களும், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.