கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் புத்தர் சிலை ஒன்றை அங்குள்ள சிங்களவர்களின் உதவியுடன் வைத்து அங்குரார்ப்பண நிகழ்வை செய்துள்ளார்கள்.
இவ்வாறாக நீங்கள் நடந்து கொள்ளும்போது தமிழீழக்கனவு எப்படி தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இல்லாமல் செல்லும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பினார்.
மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி குடியிருப்போரை நீதிமன்ற அனுமதியை பெற்று உடனடியாக வெளியேற்றுமாறு காவல்துறைக்கும் மகாவலி அதிகார சபைக்கும் உத்தரவிட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழீழக்கனவு
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற கோப் குழுவின் 100 ஆவது ஆண்டுநிறைவு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளை நாங்கள் அழித்துவிட்டோம்.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தமிழீழக்கனவு இன்னும் மறையாமல் இருப்பதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அதிபர் ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை
நான் ஒரு விடுதலைப்போராளி என்ற வகையில் ஓர் உண்மையைக்கூறுகின்றேன். எமது மக்களின் மன நிலையைக் கூறுகின்றேன் .உண்மையில் தமிழீழக்கனவு ,தனிநாட்டுக்கனவு என்பது இன்னும் எமது மக்கள் மத்தியிலிருந்து இல்லாமல் செல்வதற்கு அல்லது அழிவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரை,தையிட்டி விகாரையாக இருக்கலாம் ,குருந்தூர் மலை விகாரையாக இருக்கலாம் ,வெட்டுக்குநாறி மலையாக இருக்கலாம்,திருகோணமலையில் அமைக்கப்படும் விகாரைகளாக இருக்கலாம்,அம்பாறையில் கபளீகரம் செய்யப்படும் தமிழர் நிலங்களாக இருக்கலாம் . இவை எல்லாம் தமிழீழக்கனவை ,தனிநாட்டுக்கனவை எமது மக்கள் மத்தியிலிருந்து இல்லாமல் செல்வதற்கு அல்லது அழிவதற்கு நீங்கள் விரும்பவில்லை என்பதையே வெளிக்காட்டி நிற்கின்றன என தெரிவித்தார்.