மத்திய கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்பு இலங்கைக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு பாதிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் நாளுக்கு நாள் தீவிர நிலையை அடைந்து வரும் சூழலில், அது இலங்கையில் நேரடியான தாக்கத்தைச் செலுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
மத்திய கிழக்கில் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்கள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதி சேவைகள், வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலா கைத்தொழிற்றுறை ஆகிய சேவைத்துறைகள் பாதிக்கப்படும்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவது அவசியமானது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் வியாழக்கிழமை (19) இடம்பெறவுள்ள கட்சித் தலைவர் கூட்டத்தில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எமது உறுப்பினர்கள் எவரும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தில் (கட்சித் தலைவர் கூட்டம்) கலந்து கொள்வதில்லை.
அதற்கான அனுமதியும் இதுவரை வழங்காத காரணத்தால் சபை அமர்வின் போது இந்த கோரிக்கையை நேரடியாக முன்வைக்கிறேன் என குறிப்பிட்டார்.