தனியார் நிறுவனத்தில் பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் – பொலிஸார் தீவிர விசாரணை

0
207

தனியார் நிறுவனம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர்களான 36 வயதுடைய திருமணமான தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 19 வயதான இளம் பெண் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண் மூன்று ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர்கள் கந்தானை அணியகந்த பிரதேசத்தில் ஒன்லைன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். குறித்த பெண்ணை சந்தேகநபர்கள் நாற்காலி உள்ளிட்ட தளவாடங்களை கொண்டு மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

118 அழைப்பு ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் கந்தானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை தொடர்பான பிரச்சினையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் வன்முறையில் ஈடுபடுவது ஒருபோதும் நியாயமானதல்ல என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சட்ட வழிமுறைகள் மற்றும் பொருத்தமான வழிகள் மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.