அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால் இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரிக்கும் உயிரிழப்பு
4-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேற்கு கரை பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்
இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்துவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர் விமானங்களையும் நகர்த்தவுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்றும், அதன் பாதுகாப்பு உதவி ஞாயிற்றுக்கிழமை முதல் நகரத் தொடங்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.
உளவுத் துறை அதிர்ச்சி தகவல்
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இஸ்ரேல் அரசு நிராகரித்து விட்டதாக எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசிய எகிப்து உளவுத் துறை அதிகாரி, இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காஸா பகுதிக்குட்பட்ட பகுதியில் திட்டம் தீட்டப்படுவதாக பலமுறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டது.

எனினும் அது குறித்து விரிவாக பரிசீலிக்காமல் ஜெரூசலேம் அதனை நிராகரித்துவிட்டது.
ஈரான் குறி வைக்கப்படுகின்றதா
இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட் பலவீனப்பட்டு விட்டதா? என்ற கேள்வி தற்போது உலகின் பிரதான பேசு பொருளாக உள்ளது, எனினும் அது உண்மையல்ல என அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட்டால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனவும் மொசாட் அதனை வலிந்து ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கு ஈரான் அழித்தொழிக்க வேண்டிய தேவை உள்ளது, அதற்கான ஒரு வாய்ப்பாக இத்தாக்குதல் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.