சர்வதேச நாணய நிதியம், இலங்கை சம்பந்தமாக வெளியிட்டுள்ள புதிய நல்லாட்சி, ஊழல் மற்றும் மோசடி தெடுப்பு அறிவிக்கையின் மூலம் நிறைவேற்ற வேண்டிய 16 பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தவணை கடனை எப்படியாவது பெற்றுக்கொண்டாலும் அதன் பின்னர் நாணய நிதியத்தின் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும்.
இந்த பரிந்துரைகள் மூலம் இலங்கை சரியான வழியை நோக்கி கொண்டு வரப்படும். இந்த விடயங்கள் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு நான் வலியுறுத்தி வந்தேன் எனவும் ஹர்ச டி சில்வா கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள 16 பரிந்துரைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
1- 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆலோசகர்கள் அடங்கிய ஆலோசனை குழுவை நியமிப்பது.
2- ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு அமைய சிரேஷ்ட அதிகாரிகளின்( ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள்) சொத்துகள் தொடர்பான அறிக்கையை தெரிவு செய்யப்பட்ட இணையத்தளத்தில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பகிரங்கப்படுத்துதல்.
3- குற்றவியல் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
4-தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை திருத்துதல்.
5- நிறுவனங்கள் சட்டமூலத்திற்கு அமைய தேவையான நன்மைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் நன்மைகளை பெறும் உரிமையளர்கள் பட்டியலைவ தயாரிப்பதற்கான சட்டத்தை நிறைவு செய்து, நடைமுறைப்படுத்தல்.
6- 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் சர்வதேச சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய தேசிய கொள்முதல் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.
7- 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒரு இணையதளத்தில் போட்டி டெண்டர் கொள்முதல் ஒப்பந்தங்களின் வளர்ச்சி குறித்த அறிக்கையை வெளியிடுதல்.
8- 2024 ஆம் மார்ச் மாதம் முதல் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள அனைத்து அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள், முதலீட்டுச் சபையின் கீழ் வரிச் சலுகை பெற்ற அனைத்து நிறுவனங்களின் பெயர்கள், வரிச் சலுகைகளால் இழந்த வரித் தொகை மற்றும் நிறுவனங்கள் பெற்ற வரிச் சலுகைகள் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த தகவல்கள் 06 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
9- பொது நிறுவனங்கள் சீர்திருத்தக் கொள்கையை உருவாக்குதல்.
10- மூலோபாய அபிவிருத்தி திட்டங்கள் சட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை ஏற்படும் வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை இடைநிறுத்துதல் அல்லது நிறுத்துதல்.
11- முறையான பாராளுமன்ற அனுமதியின்றி அமைச்சர் வரிகளை அறிமுகப்படுத்துவதை தடுக்கும் வகையில் வரி விதிப்பு சட்டத்தில் திருத்தம் செய்தல்.
12- மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க அனைத்து வருமானத்தை வசூலிக்கும் திணைக்களங்களில் குறுகிய கால ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
13- மத்திய வங்கியின் நேரடி நிர்வாகத்திடம் இருந்து ஊழியர் சேமலாப வைப்பு நிதி நீக்குவதற்காக அமைச்சரவை முன்மொழிவை 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பித்தல்.
14- வங்கித் துறை மற்றும் நிதித் துறையின் மேற்பார்வைக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துதல்.
15- 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள்,ஒன்லைன் டிஜிட்டல் காணி கோப்புகளை திறந்து இணையதளத்தில் அந்த தகவலை வெளியிடுதல்.
16- நீதிச் சேவை ஆணைக்குழுவின் திறன்களை விரிவுபடுத்துவதற்காக அதன் வளங்கள் மற்றும் திறமைகளை அதிகரிப்பதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தல் என்பது அந்த பரிந்துரைகளாகும் எனவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.