ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பில் நகைச்சுவை நடிகர் ‘பிளக் பாண்டி’ கவலை

0
281

ஒரு குடும்பத்தில் தாயோ தந்தையோ இல்லாவிட்டால் அந்த வீடு எவ்வாறு இருக்குமோ அவ்வாறான நிலையையே நான் இலங்கையில் பார்க்கின்றேன் என ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலை தொடர்பில் தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் பிளக் பாண்டி தெரிவித்துள்ளார்.

உதவும் மனிதம் அமைப்பின் ஊடாக இலங்கையின் வட பகுதியில் பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டு வரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் பிளக் பாண்டி வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளார்.

இதன்போது, ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”இலங்கையில் நிறைய தேவைகள் உள்ளன. எனினும் தேவை உள்ளதாக தெரிவிப்பவர்கள் உண்மையை தெரிவிக்கின்றனரா என்பது தெரியாது. அதனால்தான் இன்று பலரும் உதவி செய்வதை நிறுத்தி விட்டனர்.

நாம் கையை நீட்டும் போது அது இல்லாதவர்களுக்கு கிடைத்தால் அது சரியானதாக இருக்கும். உள்ளவர்களும் சேர்ந்து கையை நீட்டினால் இல்லாதவர்கள் பசியோடுதான் இருப்பார்கள். அந்த பசிக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இவ்வாறான சூழல் எந்த இனத்தவருக்கும் வரக்கூடாது என்றே நான் வேண்டுவேன்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றேன். அப்போது ஓமந்தை இராணுவ சாவடியில் இராணுவம் என்னை கைது செய்தது. என்னை உளவாளி என்று நினைத்தார்கள். இரு இனம் இவ்வளவு பெரிய போராட்டத்திற்குள் இருந்துள்ளது என்பதை நினைக்கும் போது கலக்கம் மட்டுமே உள்ளது.

உயிரிழையில் உள்ளவர்களின் வாழ்க்கை பற்றி சிந்திக்கும் போது அவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு உள்ளது. முழுமையான உறுப்புகளோடு பயணித்த காலம் போக தற்போது சிலரது வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதை நினைக்கும் போது மனம் வலிக்கின்றது. இந்தியாவிலும் இதேபோன்று உடல் பாதிப்புள்ள பலர் உள்ளார்கள்.

Actor "Black" Pandi

எனினும் இந்த சூழலை எதிர்த்து நின்று இதுவரை இருந்த அடையாளம் அழிக்கப்பட்டு பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பது தெரியாத நிலையில் இருப்பதானது கவலை அளிக்கின்றது.

இவ்வாறானவர்களுக்கு எனது உதவும் மனிதம் அமைப்பின் ஊடாக இயன்றதை செய்வோம். இணைந்தே செய்வோம் என்ற கோட்பாட்டுடன் எல்லா உள்ளங்களையும் இணைத்து எதிர்கால தலைமுறைக்கு நல்ல கல்வியை கொடுத்து அவர்களை ஊக்குவித்து அடிப்படை வாழ்வாதார பிரச்சினை இல்லாமல் அவர்களின் குடும்பங்கள் சிறப்பாக வாழ வழி அமைக்க வேண்டும்.

உலகில் பல இனங்கள் உள்ளது. அதில் தமிழ் இனம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளது. அது வசதியானாலும் சரி பொருளாதார ரீதியிலானாலும் சரி அதற்காக முயற்சி எடுப்போம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழர்கள் தொப்புள்கொடி உறவு என்று இந்தியாவில் தெரிவித்தாலும் இன்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்களே இது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

இந்த விடயம் எனக்குள் பல ஆண்டுகளாக எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் விடயம். அதற்கான பல காரணங்களை நான் அறிந்துகொண்டேன். ஆனால், அதனை பகிரங்கமாக கூறமுடியாத நிலையில் உள்ளேன்.

இந்த யுத்தம் எதற்காக நடந்தது. எதற்காக நடத்தப்பட்டது என்பது இந்தியாவில் பலருக்கு தெரியாது. சில கலைஞர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சில மனிதர்களுக்கும் மட்டுமே தெரியும். ஊடகங்கள் எல்லாம் இவர்களை தீவிரவாதிகள் போல்தான் வெளிக்கொண்டு வந்திருந்தது.

உலகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட இயக்கமாக பார்க்கின்றார்களே தவிர அதற்கு பின்னர் என்ன நடந்தது. என்ன அவலம் நடந்தது என்பது பலருக்கு தெரியாது.

ஏனைய நாடுகளில் ஐந்து வருடம் இருந்தால் அவர்களை அந்த நாடு தமது நாட்டவர்களாக கருதி குடியுரிமை வழங்குகின்றது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்திராகாந்தி போட்ட சட்டம் இதுவரை உடைக்கப்படாமல் இருப்பதனால்தான் எமது இலங்கை மக்கள் அகதிகளாக வந்து இன்றுவரை குடியுரிமை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

அது மாத்திரமின்றி இங்குள்ள மீனவர் பிரச்சினைகளையும் நான் ஆராந்து பார்க்கின்றபோது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரும் கோபம் இருக்கின்றது. மனிதமாக இதனை நோக்கவேண்டும். இன்னொரு நாட்டவராக பார்க்க கூடாது என சிந்திக்கின்றேன்.

குடியுரிமை வழங்குங்கள் என்று கேட்கக்கூடிய தலைவர்கள் அமைதியாக இருப்பதனால்தான் இந்நிலை தொடர்கின்றது” என தெரிவித்துள்ளார்.