உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும். அதனை செய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நான் போட்டியிட்டிருந்தேன். பேராயர் கர்தினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூயிருந்தார்.
இந்த நாட்டின் மக்களுக்கு, நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்பட்டன. அந்த பிரச்சினைகளில் இருந்து நாங்கள் பின்வாங்கினோம், கோட்டாபய முன்னிலை ஆகினார் என்பதே உண்மை. அந்த நம்பிக்கையில்தான் அவரை மக்கள் ஜனாதிபதியாக்கினர்.
சர்வதேச ஆய்வொன்றில், சர்வதேச ஊடகமொன்றில் எமது நாட்டின் அதிகாரிகளுக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வேண்டுமென கூற வேண்டுமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை கண்டறிய வெளிநாட்டு உபதேசங்கள் எமக்கு அவசியமா? எமது நாட்டின் ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி இல்லையா? உண்மைகளை கண்டறியவும், உண்மையை பேசவும் எமது நாட்டு அரசியல்வாதிகளுக்கு பொறுப்பில்லையா?.
பேராயர் கர்தினால் எனக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியதற்கு நான் கவலைப்படவில்லை. அவர் தமது மனதுக்குள் இருந்த கவலை காரணமாக அவ்வாறு கூறியிருந்தால் நான் அதற்காக கவலைப்பட போவதில்லை.
கிறிஸ்தவ மக்களுக்கு இந்த கவலை இன்னமும் உள்ளது. எமது நாட்டின் உள்ளக விசாரணைகளின் ஊடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை கண்டறிய முடியாது. இதற்கு சர்வதேச விசாணையொன்று அவசியமாகும்.
பேராயர் கர்தினாலுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம். கிறிஸ்தவ மக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்துக்கு வருவதற்கு மாத்திரமே தேவை இருந்தது. ஆனால், கிறிஸ்தவ மக்களின் மனங்களில் இன்னமும் அந்த வேதனை உள்ளது.
அதனால்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முதலை கண்ணீர் வடித்தனர். ஆகவே,உடனடியாக சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும். அதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா என கேட்கிறோம்“ என்றார்.