பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி: வழக்கு ஒத்திவைப்பு

0
267

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பிரகடனம் செய்து வடக்கிலிருந்து கிழக்கு வரை இடம் பெற்ற போராட்டத்தின் வழக்கு ஜனவரி எட்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு நேற்றையதினம் (04.09.2023) திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு தவணையிட்டதுடன் எதிரிகள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிழக்கு மாகாணம் வரை சென்றது.

பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவாஜிலிங்கம், முன்னாள் யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் ஆகிய ஏழு பேருக்கு எதிராக பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு நேற்றையதினம் மூன்றாவது தடவையாக விசாரணைக்கு வந்த போது எதிரிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, சட்டத்தரணிகளான மணிவண்ணன், பிருந்தா பானுப்ரியன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

வழக்கு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை கிடப்பில் போடுமாறு மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா மன்றுக்கு தெரிவித்தார்.

இதன்போது வழக்கு தொடுநரான பொலிஸார் தாம் வழக்கு தொடுத்த எதிரிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்குமூலம் தரவில்லை அவர் என் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறவேண்டி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு தவணையிட்டதுடன் எதிரிகள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.