இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச முயற்சிகளில் ஜப்பானின் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் என்.எச்.கே உடனான நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட புதிய சர்வதேச கட்டமைப்பின் இணைத் தலைவராக ஜப்பான் பணியாற்றுவது வசதியாக உள்ளது.
எமக்கு ஜப்பான் அரசாங்கம் நிறைய செய்துக் கொண்டிருக்கிறது. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாங்கள் ஜப்பானுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை நனவாக்கும் முயற்சியில் இலங்கையை ஒரு முக்கிய பங்காளியாக ஜப்பான் கருதுகிறது. மேலும் தெற்காசிய நாடுகளுக்கு கடன் உதவியையும் வழங்கி வருகிறது.
அதேபோன்று பெல்ட் அண்ட் ரோட் என்ற பெயரில் தொடங்கப்பட்டு தற்போது உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி என பெயரிடப்பட்டுள்ள திட்டத்தில் சீனா, இலங்கையை ஒரு பங்காளியாக கருதுகின்றது.
சீனாவிற்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து 2017 ஆம் ஆண்டில் நாட்டின் தெற்கில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகத்தை சீன நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைக்க நேரிட்டது.
துரதிஷ்டவசமாக கடன் பிரச்சனைகளை கையாளுவதற்கு சீனாவிடம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) போன்ற முகவர் நிலையங்கள் இல்லாததன் காரணமாக இவ்வாறு வழங்க வேண்டி ஏற்பட்டது.
எவ்வாறாயினும் சீன நிறுவனத்தினால் நடத்தப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. அத்துடன் ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை கப்பல்களும் இலங்கை துறைமுகத்திற்கான அழைப்பை விடுத்துள்ளன” என ஜனாதிபதி தெரிவித்தார்.