நாட்டில் 60% மக்கள் இன்னும் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்கவில்லை – மைத்திரி

0
214

“ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் கோரப்பட வேண்டும். ஆனால் தேர்தலில் எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை 60 வீத மக்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை“ இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72ஆவது தேசிய மாநாடு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. நாடு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் போது, அந்த நெருக்கடியில் இருந்து அதை வெளியே கொண்டு வருவது சவாலாக உள்ளது.

ஒரு ஜனாதிபதியோ, அமைச்சரவையோ அல்லது பாராளுமன்றமோ மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும். ஜனாதிபதி முதல் கடைசி குடிமகன் வரை நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு நாட்டை ஒரு இலக்குடன் நடத்துவதற்கு ஓரணியில் திரள வேண்டும்.

இந்த நாட்டின் குடிமக்களால் இன்னும் நாம் அனைவரும் இலங்கையர்கள் என்று கூற முடியவில்லை. அரசியல் இயக்கங்கள் போதியளவு நவீனப்படுத்தப்படவில்லை.

பல ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பிளவுகள், நாட்டில் ஒற்றுமை சீர்குலைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.

அதிகமான அரசியல் கட்சிகள் நாட்டில் மேலும் பிளவை உருவாக்கி வருகின்றன. தங்கள் கட்சி ஆதரவாளர்களை அடிமைகளாக நடத்தும் அரசியல் பிரிவுகள் உருவாகியுள்ளன.

அரசியல் கட்சிகளின் இந்த நிலைமை நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்துள்ளது. சில அரசியல் குழுக்கள் நலன்புரி சங்கங்களாக மாறியுள்ளன. அரசியல் கட்சிகள் தொண்டு நிறுவனங்களாக இருக்கக் கூடாது“ என்றார்.