இலங்கையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மேலும் 50 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் இந்தியா-இலங்கை உயர் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) கட்டமைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்பது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்பது திட்டங்களுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு அதிகரிப்புக்குப் பிறகு, 3 பில்லியன் ரூபாய்வரை முதலீடுகள் அதிகரிக்கும்.
கல்வி மற்றும் சுகாதாரம், விவசாயத்துக்காக இந்தியாவால் வழங்கப்பட்டுவரும் உதவிகள் இந்த திட்டங்களில் பிரதானமாவையாகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் HICDP கட்டமைப்பின் கீழ் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 60 க்கும் மேற்பட்ட மானியத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 20 இதர திட்டங்கள் பல்வேறு பொறிமுறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியா – இலங்கை உயர் தாக்க சமூக மேம்பாட்டுத் திட்ட கட்டமைப்பு 2005 இல் இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு முறையும் ஐந்தாண்டு காலத்திற்கு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டது.
இலங்கையில் இந்தியாவின் ஒட்டுமொத்த அபிவிருத்தி ஒத்துழைப்பு கூட்டாண்மை தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானியமாக உள்ளது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, வீட்டுவசதி, வாழ்வாதார உதவி போன்ற துறைகளில் இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களை மையமாகக் கொண்ட திட்டங்களாகும்.
1990 ஆம் ஆண்டு அவசர அம்புலன்ஸ் சேவை, புகையிரதப் பாதை புனரமைப்பு, ஒருங்கிணைந்த நீர்நிலைகள், இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் யாழ்ப்பாணம் கலாச்சார மையம் ஆகியவை இதில் அடங்கும்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரித்துள்ளதாக கூறும் பொருளாதார ஆய்வாளர்கள், இலங்கையில் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் இந்தியாவின் கரிசனைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கின்றனர்.