உலகின் பல நாடுகளிலும் பாதுகாப்புப் படையினரால் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட “கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு” என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் சட்டமுறையற்ற கைதுகளை எதிர்த்து இந்த கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்றைய நாள் சர்வதேச அளவில் காணாமல் போனோருக்கான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் வவுனியாவில் 2014 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி பன்னாட்டு காணாமற்போனோர் நாள் நிகழ்வும், ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை சார்ந்த அமைப்புகள் இந்த தினத்தை முன்கொண்டு செல்கின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் யுத்தகாலத்திலும், யுத்தத்துக்குப் பின்னரும் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற வெவ்வேறு கலவரங்களின் போதும் அதிக எண்ணிக்கையானவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன தங்களின் உறவினர்களுக்கு என்னானது என்பது குறித்து அறிவிக்குமாறு வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினமும்(30.08.2023), வடக்கு கிழக்கில், கவனயீர்ப்பு போராட்டப் பேரணிகள் நடத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாணம்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கோரி யாழில் போராட்ட பேரணியொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டம் யாழ் முனியப்பர் கோவிலடிவரை பேரணியாகச் சென்று நிறைவுபெற்றது.


மன்னார்
சர்வதேச காணாமல் ஆக்கப்ப்ட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மன்னார் சதோச மனித புதைகுழிய்யில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.
வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மட்டக்களப்பு
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் காலை 10.00 மணியளவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இக்கவனயீப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பித்த பேரணி காந்திப் பூங்காவில் நிறைவடைந்தது.
உள்ளக பொறிமுறையை எங்கள் மீது திணித்து கால இழுத்தடிப்புக்கு துணை போவதன் மூலம் மிகுதியுள்ள நேரடிசாட்சிகளான எங்களையும் இறக்க விட்டு சாட்சிகள் அழிவதற்கு துணை போகாமல் எங்களின் கோரிக்கையான சர்வதேச விசாரனை ஒன்றின் மூலம் ரிஆர்சி க்கு அல்லது விசேட தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் எங்களுக்கு விரைவான நீதியை பெற்றுத்தர சர்வதேசமும் ,ஐ.நா வும் முன்வரவேண்டும் என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடிய மட்டக்களப்பு போராட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
‘சர்வதேச நீதிப்பொறிமுறையில் எங்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடு’ என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் ஏற்பட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். வடகிழக்கு இணைந்ததாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்கத்தின் போராட்டம் இன்றைய தினம் மட்டக்களப்பிலும் மன்னாரிலும் இடம்பெற்றுவருகின்றது.
இதன் கீழ் இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தில் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து பேரணியானது ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுத்தூபி வரையில் சென்றது.

அங்கு காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிய கொடவின் மனைவி சந்தியா எக்னலிய கொட தலைமையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் ஒளியேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
.போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் சர்வதேச நீதிகோரிய பல்வேறு பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூக அமைப்புகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மகளிர் அமைப்புகள்,இளைஞர் அமைப்புகள்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.



