குருந்தூர்மலை பொங்கல் விழாவை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
207

“குருந்தூர்மலை பிரதேசத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதை தடுப்பதற்கு யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை” என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று (18.08.2023) கட்டளை பிறப்பித்துள்ளது.

குருந்தூர் மலையில் இன்றையதினம் (18.08.2023) நிகழவிருக்கும் பொங்கல் நிகழ்வை கருத்திற்கொண்டே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொங்கல் உற்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது.

இருப்பினும் குருந்தூர்மலை பிரதேசத்தில் உள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையை தடுப்பதற்கு வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமாக விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அல்லது இதற்கு பாதகம் செய்யும் பிரிவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடுக்க யாருக்கும் உரிமையில்லை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kurundur Hil Pongal Festival Court Order

தொல்பொருள் திணைக்களத்தின் நிபந்தனைகள்

இதேவேளை பொங்கல் உட்சவத்தினை மேற்கொள்ளும் தமிழர் தரப்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூல ஆவணம் ஒன்றினையும் வழங்கியுள்ளது இந்த ஆவணத்தில் ஏழு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு – பாதிப்பு ஏற்படாதவாறு தொல்லியல் துறை அதிகாரிகள் குறிப்பிடும் திறந்தவெளியில் தொல்பொருள் அல்லாத கல், செங்கல், மணல் போன்ற ஆதரவின் மீது இரும்புத் தகடு வைத்து அதன் மீது தொல்பொருள் அல்லாத கற்களைப் பயன்படுத்தி அடுப்பு தயார் செய்து அதில் பொங்கல் சமைப்பதில் தொல்பொருளியல் திணைக்களத்திற்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால் குறித்த இடம் தொல்பொருளியல் பாதுகாப்பு காப்பக இடமாக உள்ளதுடன் வன பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வனப்பகுதியாக காணப்படுவதனால் இந்த இடத்தில் தீ மூட்டும்போது வன பாதுகாப்பு துறையின் சட்டவிதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயற்பட வேண்டும்.

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடுக்க யாருக்கும் உரிமையில்லை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kurundur Hil Pongal Festival Court Order

2. தொல்பொருளியல் எச்சங்கள் மேற்பரப்பில் காணப்படாததும், நிலம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நினைவுச்சின்னங்களில் இருந்து விலகி தொல்லியல் துறை அதிகாரிகளால் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப்படும் இடத்தை மட்டுமே இதற்காக பயன்படுத்த வேண்டும்.

3. அகழ்வு செய்யப்பட்ட எல்லைகளில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அபாயகரமான நிலையில் இருப்பதால் அதன் எல்லை, அரண்களில் நடக்கவேண்டாம்.

4. அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மீது உணவு, பழங்கள், திரவப்பொருட்கள், தேங்காய் போன்றவற்றை நேரடியாக வைக்க வேண்டாம்.

5. தொல்பொருட்கள் மீது தேங்காய் உடைத்தல் அல்லது பால் போன்ற திரவப்பொருட்களை தெளித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.

6. திருவிழா நடவடிக்கையால் தொல்பொருளியல் இடம், நிலத்திற்கு கீழ் உள்ள தொல்பொருட்கள் மற்றும் அதன் கட்டமைப்புகளிற்கு எவ்விதமான சேதமும் ஏற்படக்கூடாது.

7. பொங்கல் பண்டிகைக்காக கூடும் மக்களால் இடத்தை வழிபடவரும் மற்றத் தரப்பினருக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும். என்ற ஏழு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.