வட மாகாண கல்வியை அரசியல் மயமாக்கும் ஆளுநர்! போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஜோசப்

0
176

வட மாகாண கல்வியை அரசியல் மயப்படுத்தும் செயற்பாட்டை வட மாகாண ஆளுநர் கைவிடாது போனால் தொழிற்சங்க போராட்டம் வெடிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (06.08.2023) ஆசிரியர்களைச் சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு கல்வி ஆசிரிய இடமாற்றங்களில் இடமாற்றச் சபையின் அறிவுறுத்தல்களை மீறி ஆளுநர் இடமாற்றங்களை வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண கல்வியின் நிர்வாக செயற்பாடுகள் சுதந்திரமாகவும் வினைத்திறனாகவும் நடைபெறுவதற்கு ஆளுநர் இடையூறு ஏற்படுத்தக்கூடாது.

வட மாகாண கல்வியை அரசியல் மயமாக்கும் ஆளுநர்..! போராட்டம் வெடிக்கும் என்கிறார் ஜோசப் | A Governor Who Politicizes Northern Education

ஆளுநருக்கு இடமளிக்க மாட்டோம்

அது மட்டுமல்லாமல், வடக்கில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு, ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

மேலும் ஆயிரம் பாடசாலைகளைத் தேசியப் பாடசாலைகளாக்கும் திட்டத்திற்கு சுமார் 2,285 மில்லியன் ஒதுக்கப் பட்ட நிலையில், வடக்கிலும் தேசியப் பாடசாலைகளின் சுவர்களில் எழுதி திறப்பு விழா செய்தார்கள்.

ஆனால், 22 பாடசாலைகள் மட்டும் தேசியப் பாடசாலைகளாக மாற்றம் பெற்ற நிலையில் எஞ்சிய பணத்திற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.

எனவே, வடக்கு கல்வியை அரசியல் மயமாக்குவதற்கு வடமாகாண ஆளுநருக்கு இடமளிக்க மாட்டோம் என்பதுடன், அவர் தனது செயற்பாடுகளை நிறுத்தாது போனால் நாம் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.