முஸ்லீம் சடலங்களை வலுக்கட்டாயமாக எரிக்க முடிவு செய்த அதிகாரிகள் மீது விசாரணை

0
320

கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக எரிக்க பரிந்துரைத்த அதிகாரிகள் தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் விசாரணை நடத்த சுகாதார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கோவிட் காலத்தில் முஸ்லிம்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரித்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அமைச்சர் மட்டத்தில் விசாரணை நடத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சுதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுமுன்தினம் (20.07.2023) நாடாளுமன்றத்தில் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

உடல்களை எரிக்க அதிகாரிகள் எடுத்த தீர்மானம், இலங்கை முஸ்லிம்களின் மத உரிமைகளை மிதிக்கும் வகையில் எடுக்கப்பட் தீர்மானம் எனவும், இது ஒரு வெறுப்பினைத் தூண்டும் குற்றம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரியூட்ட தீர்மானித்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை | Investigation Against Muslim Corpses Burn Issue

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் அந்த அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக என நாடாளுமன்றத்தில் தெரிவித்த ரவூப் ஹக்கீம், அந்த அதிகாரிகள் மீது அமைச்சு மட்டத்திலாவது விசாரணை நடத்த முன்வருவீர்களா என சுகாதார அமைச்சரிடம் வினவினார்.

அமைச்சு மட்டத்திலாவது விசாரணை நடத்தப்படுமா?

“உலகில் எந்த நாட்டிலும் இவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், அறிவியல் அடிப்படையின்றி தவறான தீர்மானத்தை எடுத்து முஸ்லிம் மக்கள் மீது இந்த மாதிரியான அழுத்தத்தை கொடுக்கும் இந்த அதிகாரிகளுக்கு எதிராக அமைச்சு மட்டத்திலாவது விசாரணை நடத்தப்படுமா?”

“நீங்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதிலளித்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரின் உடன்பாட்டை கேட்டறிந்தார்.

முஸ்லிம்களின் சடலங்களை வலுக்கட்டாயமாக எரியூட்ட தீர்மானித்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை | Investigation Against Muslim Corpses Burn Issue

இலங்கைக்கு அவமானம்

உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் இலங்கையில் ஒரு வருடமாக வலுக்கட்டாயமாக நடைமுறைபடுத்தப்பட்டு வந்த அனைத்து கோவிட் பிணங்களையும் எரிக்கும் கொள்கையானது இனவாத கொள்கையாக மாறியதோடு மார்ச் 2021இல் இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக, 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் கோவிட் தொற்றால் இறந்த உடல்களை தகனம் செய்ய உத்தரவிட்டது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சடலங்களை புதைப்பது நிலத்தடி நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது என அதை நியாயப்படுத்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கருத்து தெரிவித்தது.

உலகப் புகழ்பெற்ற வைரஸ் குறித்த பேராசிரியர் மலிக் பீரிஸ் உள்ளிட்ட நிபுணர்களால் இது ஒரு அடிப்படையற்ற மற்றும் விஞ்ஞானமற்ற விடயம் என நிராகரிக்கப்பட்டாலும், அரசாங்கம் அதை ஏற்கவில்லை.

பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள்

கோவிட் தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்வது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு முரணானது என்பதோடு, பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயமானது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் இனவாத கொள்கையைப் பேணுவதாக செய்திகள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகளின் இலங்கை குறித்த எதிர்மாறான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்தது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு இனம் சார்ந்த கொள்கை எனக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முதன்முதலில், 2021 பெப்ரவரி ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் போராட்டமான பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான 700 கிலோமீற்றர் பாத யாத்திரையின் போது, தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதற்கு எதிராக பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

சில நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், அரசாங்கம் காரணம் கூறாமல் ஓட்டமாவடி மயானத்தில் மாத்திரம் கோவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்தது.

அறிவியல் பூர்வமற்ற பலவந்த தகனக் கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் வழங்கப்படும் என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.