பிரித்தானியாவின் நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய “Storm Shadow” ஏவுகணைகளை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளனர். இது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
ரஷ்ய வீரர்கள் கையில் “Storm Shadow”
நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய “Storm Shadow” ஏவுகணைகளை பிரித்தானியாவிடம் இருந்து உக்ரைன் பெற்றதில் இருந்து, சில குறிப்பிட்ட முக்கிய ரஷ்ய எல்லைகளை அழிக்க மட்டுமே இந்த “Storm Shadow” ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தின் தன்னார்வ படையான BARS-11 மற்றும் Tsar’s ஓநாய்கள் கட்டளை பிரிவு போர் களத்தில் இருந்து பிரிட்டிஷ் “Storm Shadow” ஏவுகணைகளை கைப்பற்றி இருப்பதாக Tsar’s ஓநாய்கள் கட்டளை பிரிவு தலைவர் டிமிட்ரி ரோகோசின்(Dmitry Rogozin) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்த தகவலில், சிறிது அளவு சேதமடைந்த ஆனால் நல்ல நிலையில் இருக்ககூடிய “Storm Shadow” ஏவுகணைகளை கைப்பற்றி இருப்பதாகவும், ஏவுகணை தொழில்நுட்ப வல்லுநர்களால் போர் களத்திலேயே தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் ஏவுகணையானது உயர்-மட்ட எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தால் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏவுகணை வீழ்ந்த போது அவற்றில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
“Storm Shadow” ஏவுகணையை டிராபி ஏவுகணை என குறிப்பிட்ட அவர், இதனை கைப்பற்றும் நடவடிக்கை இரண்டு நாட்களாக நடைபெற்றது எனவும் குறிப்பிட்டார்.
இது அதிக சக்தி கொண்ட நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய இலக்குகளை எவ்வாறு தடுத்து அழிப்பது என்பது குறித்த அறிவை ரஷ்ய படைகளுக்கு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு சிக்கலா?
“Storm Shadow” ஏவுகணை குறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள இந்த செய்தி, மற்றும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் “Storm Shadow” ஏவுகணைகளை பெரும்பாலும் ஒத்து இருப்பதால் பிரித்தானியாவுக்கு இது மோசமான செய்தியாக இருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதே போல சிரியாவிலும் SCALP EG ஏவுகணைகளை ரஷ்ய படைகள் வீழ்த்தியுள்ளனர். ஏவுகணைகளை வீழ்த்துவது முதல்முறை என்று இல்லாவிட்டாலும், தற்போது மிகப்பெரிய வெற்றி என ரஷ்யா அறிவித்து இருப்பது பிரித்தானியா மற்றும் பிரான்ஸுக்கு கவலை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் போர் நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கும் போது இது போன்ற சிக்கல்கள் எப்போதும் தெரிந்த ஒன்றாகவே உள்ளது, அதை சம்பந்தப்பட்ட நாடுகளும் அறிந்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.