நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து மிரட்டி வரும் நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் இறுதியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி சென்னையில் பிறந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மறைந்த பழம்பெரும் நடிகர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண்ணாவார். தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ரித்விக் வம்சி என ஒரு மகன் உள்ளார். பரத நாட்டியத்தில் ஈடுபாடு கொண்ட ரம்யா கிருஷ்ணனுக்கு 1983ம் ஆண்டு வெள்ளை மனசு எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதன் பின்னர் வெளியான ரஜினிகாந்தின் படிக்காதவன் படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்த நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்தது.
பார்த்த ஞாபகம் இல்லையோ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் பல படங்களில் அம்மனாக நடித்து ரசிகர்களுக்கு அருள் பாலித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனை ரசிகர்கள் காலம் கடந்தாலும் மறக்க மாட்டார்கள்.

ஹீரோயின்களாலும் வில்லியாக மிரட்ட முடியும் என்பதை ரம்யா கிருஷ்ணன் நிரூபித்துக் காட்டியிருப்பார்.
பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்து அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தார். இப்படி சினிமாவில் இளம் ஹீரோயின்களுக்கு எடுத்து காட்டாக இன்றும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராஜமாதா ரம்யா கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.