உயிரியல் பூங்காவிலிருந்து 5 சிங்கங்கள் மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ந்து போயினர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. நேற்று காலை இந்த உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுவதற்கு முன்பு ஊழியர்கள் வழக்கம்போல் விலங்குகளை ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிங்கங்கள் மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ந்து போயினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது 5 சிங்கங்களும் கூண்டில் இருந்து வெளியேறி தப்பியோடியது தெரியவந்தது.
இதனால் பெரும் பதற்றம் உருவானது. எனினும் சிங்கம் தப்பிய சமயத்தில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் பாதுகாப்பு கருதி உயிரியல் பூங்கா உடனடியாக பூட்டப்பட்டது.
தப்பியோடிய சிங்கங்களை தேடும் பணியில் ஊழியர்கள் மும்முராக ஈடுபட்டனர். அதன்படி கூண்டில் இருந்து தப்பிய சிறிது நேரத்திலேயே உயிரியல் பூங்காவுக்கு அருகே சுற்றிதிரிந்துகொண்டிருந்த சிங்கங்களை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்கள் அந்த சிங்கங்களை பாதுகாப்பாக கூண்டுக்கு கொண்டு சென்றனர். கூண்டில் இருந்து சிங்கங்கள் எப்படி தப்பியது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு இதே போல் சிட்னியில் உள்ள மற்றொரு உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கம் ஒன்று தப்பி சென்றதும், அது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதால் சுட்டுக்கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.