உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட இரண்டு வானளாவிய 40 மாடி கட்டடங்கள் வெறும் 9 வினாடிகளில் இன்று இடிக்கப்படுகின்றன.
40 மாடி கட்டிடங்கள்
உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டது.
அதன்படி இன்று இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்படுகின்றன. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சூப்பர்டெக் நிறுவனம்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து இன்று பிற்பகல் இந்த 328 அடி உயர இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட உள்ளது. பொதுவாக இத்தகைய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக ஆண்டுகள் கணக்கு எடுத்துக் கொள்ளும்.
தரை மட்டமாகும் கட்டிடம்
ஆனால் நவீன தொழில்நுட்ப முறையில் இந்த கட்டிடம் தகர்க்கப்பட உள்ளது. தற்போது இந்த கட்டிடத்தில் மொத்தம் 25,000 துளைகள் இடப்பட்டுள்ளன. இந்த துளைகளில் 3,700 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இத்துளைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கட்டிட இடிப்புக்கான நேரத்தில் ஒரே நேரத்தில் அனைத்து வெடிபொருட்களும் வெடிக்க வைக்கப்படும். இதனால் ஒட்டுமொத்த கட்டிடமும் சில நிமிடங்களில் தரைமட்டமாகிவிடும். இப்படி பிரம்மாண்டமான இரட்டை கோபுர கட்டிடம் இடிந்து விழும் போது எழும் தூசு மண்டலம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். இதனால் நொய்டாவில் இன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தகட்டிடம் இடிந்து தரைமட்டமாகும் போது அருகே உள்ள கட்டிடங்களில் தூசுகள் படியாத அளவுக்கு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன இதே போல் கொச்சியில் 2020-ம் ஆண்டு இதேபோல பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிக்கப்பட்டது.
இந்த பணியை தமிழ்நாட்டின்விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கட்டிட தகர்ப்பு பணியினை மேற்கொள்ளும் எடிபைஸ் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் மயூர் மேத்தா, “வெடிபொருட்களை நிரப்பும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

100 மீட்டர் தொலைவில் இருந்து இந்த கட்டிடங்கள் வெடிக்கச் செய்யப்படும். வெடிபொருட்கள் வெடித்து சிதற 10 வினாடிகள் ஆகும். அடுத்த 5 வினாடிகளில் மொத்த கட்டிடங்களும் பாகங்களாக கீழே உதிர்ந்துவிடும் என்றார்.
கட்டிடம் தரைமட்டமானதும் 55,000 டன் முதல் 80,000 டன் குப்பைகள் உருவாகும். அவற்றை அங்கிருந்து முறையாக அப்புறப்படுத்த 3 மாதங்கள் வரை ஆகலம் என கூறப்படுகிறது.