விமானத்துறையால் 22 பில்லியன் ரூபா இலாபம்..!

0
206

சேவை வழங்கல் ஊடாக நாட்டின் விமானத்துறை கடந்த ஜனவரி மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 22 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அமைச்சர் அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக விமான சேவைகள் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தன. கொவிட் தொற்றுநோய் காரணமாக விமானங்கள் நிறுத்தப்பட்டதுடன் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

நாட்டின் விமானத்துறையால் 22 பில்லியன் ரூபா இலாபம் | 22 Billion Rupees Profit Country Aviation Industry

டொலர் நெருக்கடியால் முழு விமானப் போக்குவரத்துத் துறையும் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. எவ்வாறாயினும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அபிவிருத்தி செய்ததன் காரணமாக, தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக இதனை, சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரசபை பெயரிட்டுள்ளது.

பண்டாரநாயக்க விமான நிலையம் கடந்த ஒகஸ்ட் மாதம் 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. விமான சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 22 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளது” என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.