தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா

0
32

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் எஞ்சிய காலங்களுக்கான பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக எம்.ஏ சுமந்திரன் அறிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் தலைமை தொடர்பான விடயம் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பாக சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா தொடர்பாக வாக்கெடுப்பு நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக பல வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதும் 18 உறுப்பினர்கள் கையொப்படமிட்ட ஆவணம் ஒன்று சபைக்கு கையளிக்கப்பட்டது.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா | Mavai Senathiraja Leader Ilankai Thamilarasukadchi

மாவைசேனாதிராஜா கட்சியின் நன்மை கருதி அவரது நற்பெயருக்கு களங்கம் இல்லாமல் தன்னுடைய ராஜினாமாவை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதில் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

அதற்கு எதிரான கருத்துக்களும் இருந்தது. இறுதியில் கட்சி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறது. மாவை சேனாதிராஜா கட்சியினுடைய அரசியல் குழுவின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார்.

கட்சியின் தலைவர் ராஜினாமா செய்தால் இன்னொருவர் நியமிக்கபட வேண்டும் என்று எமது யாப்பிலும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் எஞ்சிய காலத்திற்கு பதில் தலைவராக கட்சியினுடைய சிரேஸ்ட உபதலைவர் சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என்று ஏகமனதாக வாக்கெடுப்பு இல்லாமல் பிரிவினை இல்லாமல் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே கட்சித்தலைவர் பதவியை சிவஞானம் வகிப்பார் அரசியல் குழு என்பது குழுவாக எடுக்கப்படும் தீர்மானங்களை மையபடுத்தி மத்திய செயற்குழு சந்திக்க முடியாத தருணங்களில் அரசியல் குழு கூடுவது வழக்கமாக இருக்கிறது.

பல முக்கிய விடயங்களை அரசியல் குழுவே எடுத்திருக்கிறது. எனவே முன்னைய காலத்தில் மாவை சேனாதிராஜா கட்சித் தலைமை பொறுப்பை எடுத்தபோது சம்பந்தன் அவர்களை அரசியல் குழுவின் தலைவராக நியமித்திருந்தோம்.

அதனடிப்படையிலேதான் இப்போது மாவை சேனாதிராஜா அந்த பதவியினை வகிப்பார் என்ற தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கட்சி தொடர்பாக யாழில் தொடரப்பட்ட வழக்கில் இதுவரை கட்டளைகள் எதும் வழங்கப்படவில்லை என தெரிவித்த சுமந்திரன் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்கு இல்லை என்றும் கூறினார்.