புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும் அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அமையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான திட்டங்களுடன் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற கருத்துரு பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் பொது சேவை உறுதிமொழியை வழங்கிய போது இம்முறை ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியும் உள்ளடக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.
மேலும் முதற்கட்டமாக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.