கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

0
27

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் இன்று (23) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம உத்தியோகத்தரை தாக்கியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதேச செயலகத்தின் முன்பாக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியோகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசத்துக்குச் சென்று வரும்போது சிலரால் தாக்கப்பட்டார்.

தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகத்தின் முன்பாக ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“கைது செய் கைது செய் தாக்கியவரை”, “அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய்”, “கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா”, “அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு” என கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையானார். இதனையடுத்து சமபவம் தொடர்பில் நடவரிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடித்தையும் கையளித்தனர்.