பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று காசா நிலப்பரப்பில் பலஸதீனியர் ஒருவர் கொல்லப்பட காரணமாக இருந்த இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் இலங்கை தலைநகர் கொழும்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹிந்த் ரஜாப் அமைப்பு (HRF) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்கள் கல் ஃபெரன்புக் என்று அடையாளப்படுத்தும் இஸ்ரேலிய சிப்பாயை உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது. அவர் அந்த பலஸ்தீனியரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்ததோடு மட்டுமின்றி அவரது சடலத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டார் என அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தற்போது கொழும்பில் அந்த நபர் இருப்பதாக கூறும் அந்த அமைப்பு இலங்கை அதிகார்கள் உடனடியக அவரை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் (ICC) ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. “குற்றவியல் நீதிமன்றத்திடம் முறையான குற்றச்சாட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது மேலும் சர்வதேச பொலிஸிடடும் அவரை கைது செய்ய கோரிக்கை விடுத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது”. ஹிந்த் ரஜாப் அமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆதாரம் என அவர்கள் கோரும் விடயங்களை பட்டியலிட்டுள்ளது.
“கடந்த ஓகஸ்ட் 9, 2024 அன்று கல் ஃபெரன்புக், பொதுப்படையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசாவில் உயிரிழந்த பலஸ்தீனியரின் சடலத்தை அவமதிக்கும் வகையில் பார்க்கும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது இறந்தவரை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது”.
தமது ஆதாரத்தின் மேலும் ஒரு பகுதியாக அந்த உடலை அவர் பார்க்கும் வேளையில் மற்றொருவரின் குரல் இதோ அவரை கொன்றொழித்தவர் என கூறுவதும் இதோ அந்த சடலம் என்று ஹீப்ரூ மொழியில் கூறுவதும் கேட்கக்கூடியதாக உள்ளது என்று ஹிந்த் ரஜாப் அமைப்பு கூறுகிறது.
மேலும் திரு ஃபெரன்புக் அந்த சடலத்தை கண்டு நகைப்பதும் அவரது கொலையில் தான் ஈடுபட்டிருந்தது குறித்து பெருமையாக கூறி அந்த சடலம் ஒரு வெற்றியை குறிக்கிறது என்றும் கூறி சத்தமாக சிரிப்பதும் காணக்கூடியதாக உள்ளது என ஹிந்த் ரஜாப் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தாங்கள் செய்த ஆய்வுகள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் ஃபெரன்புக், காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறினார் என்றும் இறந்த நபரை இகழ்ந்தார் என்பதும் கண்டறியப்பட்டதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
”அந்த ஏளனமும், கொண்டாடுகின்ற வகையிலே பேசியதும் ஃபெரன்புக் அந்த பலஸ்தீனியரின் சட்டவிரோத கொலையில் நேரடி தொடர்புபட்டுள்ளார் என்பதை காத்திரமாக் காட்டுவதாக கூற முடியும். மேலும் தேவையில்லாமல் இராணுவத்தினர் பொதுமக்களின் உடமைகள், கட்டமைப்புகளை அழித்த ஆவணங்களும் உள்ளன”.
இவ்வகையில் காத்திரமான ஆதாரங்கள் என அவர்கள் கூறும் விடயங்களின் அடிப்படையில் இலங்கை அரசு அந்த பலஸ்தீனியருக்கு நியாயம் கிடைக்கும் வகையில், தனது சர்வதேச் கடப்பாடுகளுக்கு அமைய உடனடியாக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றுஹிந்த் ரஜாப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“கால் பெரன்புக்கை கைது செய்து தடுத்து வைக்கும் அதே நேரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி அதிகாரபூர்வமாக கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சர்வதேச சட்டவாயங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதில் போர்க் குற்றங்கள் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் தப்பவிடப்படுவதும் அடங்கும்”.
அவரை தடுத்து வைக்க வேண்டும் என்பதற்கு அப்பாற்பட்டு, ரோம் உடன்பாட்டின் சரத்து 15இன் கீழ் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடமும் குற்றச்சாட்டை ஹிந்த் ரஜாப் அமைப்பு பதிவு செய்துள்ளது. அதில் குறிப்பாக மூன்று குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது, முதலாவது ஒரு நபரின் தனிப்பட்ட கௌரவத்தை குலைப்பது, இரண்டாவது பாதுகாக்கப்பட்ட ஒருவரை கொலை செய்வது மற்றும் மூன்றாவதாக பொதுமக்களுக்கான கட்டமைப்புகளை நிர்மூலமாக்கியது என்று அவர் ரோம் உடன்படிக்கையின் கீழ் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் எங்கும் தப்பிச் செல்லாமல் இருக்கவும், எங்கிருந்தாலும் அந்த நாடு அவரை பிடித்து உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோரி, சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல் அமைப்பிற்கும் தி ஹிந்த் ரஜாப் அமைப்பு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சம்பவம் காசா நிலப்பரப்பில் இஸ்ரேலியப் படைகளால் “திட்டமிட்ட வகையில் சீராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு” ஒரு சாட்சி என்று அந்த அமைப்பு மேலும் குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்த இஸ்ரேலிய சிப்பாய் மீதான வழக்கு என்பது “பொது மக்களை சட்டவிரோதமாக கொலை செய்வது, இறந்தவரின் உடலை கண்ணியமின்றி கையாள்வது, அதை கௌரவமற்ற வகையில் நடத்துவது காசாவில் பொதுமக்களுக்கான கட்டமைப்புகளை நிர்மூலமாக்குவது என்பதற்கு ஒரு உதாரணம் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“இந்தச் சம்பவம், திட்டமிட்ட வகையில் பாதிக்கப்பட்ட பலஸ்தீனியர்களை இழிவுபடுத்தப்படுவதை காட்டுகிறது. அது சர்வதேச சட்டங்களின் கீழ், போர் குற்றமாக கருதப்படும். கல் ஃபெரன்புக்கின் கைகளில் ரத்தம் உள்ளது. அவர் இறந்த பலஸ்தீன பொதுமகன் ஒருவரின் உடலை மட்டும் இழிவுபடுத்தவில்லை. அந்த சட்டவிரோத கொலைக்கு தானே பொறுப்பு எனவும் உரிமை கோருகிறார். இலங்கையில் அவரது பிரசன்னம் என்பது பொறுப்புக்கூறல் விடயத்தில் அவரை முன்னிலைப்படுத்த இலங்கைக்கு ஒரு முக்கியமானொதொரு வாய்ப்பாக கிடைத்துள்ளது.”
இப்போது உடனடியாக இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுத்து கல் ஃபெரன்பூக்கை தடுத்து வைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அவரை ஒப்படைக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தி ஹிந்த் ரஜாப் கோருகிறது. மேலும் ரோம் உடன்படிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அவர் மீது விசாரணையை நடத்தி உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோருகிறது.
அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் இழைத்த அட்டூழியங்களுக்காக சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படாமல் இருக்கும் கலாச்சாரம் பொறுத்துக் கொள்ளப்படாது என்ற செய்தியை இலங்கை வெளியிட வேண்டும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தமது சொந்த படையினரையே
அரசால் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த முடியவிலை என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவரை முப்படைகளைச் சேர்ந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.