ஆளும் கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்கள் தொடர்பில் சிக்கல்

0
42

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தி வருகின்றன.

அதற்கமைய இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவம், சபாநாயகர் ஆரம்பத்தில் கலாநிதி பட்டம் மற்றும் பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளதாகக் காட்டி மக்களை ஏமாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆளுங்கட்சியிலுள்ள மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டங்கள் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு சிக்கலுக்குள்ளான எவரும் இதுவரையில் எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை.

நாடாளுமன்றத்தை முன்பள்ளி என விமர்சித்த தேசிய மக்கள் சக்தி அதனைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குப் போலி பட்டம் பெற்றவர்களை கொண்டு நிரப்பியுள்ளதாகத் தோன்றுகிறது என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வருவது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (12) கருத்து வெளியிட்ட அவர் சபாநாயகர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணையைக் கொண்டு வருவது பொருத்தமானதெனக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.