அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு எதிர்க்கட்சித் தரப்பின் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமானை 11 இற்கு 10 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். எதிர்க்கட்சித் தரப்பில் காஸ் சிலிண்டர் சார்பில் தெரிவான தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும், ரோஹித அபேகுணவர்தன எம்.பியும் இந்தத் தேர்வில் பங்குபற்றாத நிலையில் சிறீதரன் வெற்றி பெற்றிருக்கின்றார்.
இதேசமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற விவகாரக் குழுவுக்குப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புக்கும் தம்மைத் தெரிவு செய்ய சிறீதரன் விருப்பம் தெரிவித்த போதிலும், அந்தப் பொறுப்பைச் சாணக்கியனுக்கு வழங்குவதென தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு தீர்மானித்திருப்பதாக அறியவந்தது.